சென்னை: தவெக தொண்டர்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார் அக்கட்சித் தலைவர் விஜய்.
அவற்றுள் சில அன்புக் கட்டளைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய தமது கோவை பயணத்தின்போது, தவெக தொண்டர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசமின்றி வேகமாகப் பின்தொடர்வது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது தமக்கு மிகவும் கவலை அளித்ததாக விஜய் கூறியுள்ளார்.
“நமது பயணத்தின்போது ஆம்புலன்ஸ் ஒன்று வந்தபோது, அதற்கு அனைவரும் வழிவிட்டதைப் பாராட்டியே ஆக வேண்டும்.
“இதுபோன்ற நல்ல செயல்கள் செய்யும் தொண்டர்களின் அன்பைப் புரிந்துகொண்டு தலைவணங்குகிறேன். அதேசமயம், அன்பு மிகுதியால் நீங்கள் செய்யக்கூடிய சிலவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது.
“நாம் அன்பை வெளிப்படுத்தும் விதம் அதீதமாகவே இருந்தாலும் அது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, தொண்டர்களின் பாதுகாப்புதான் எனக்கு மிகவும் முக்கியம்,” என்று விஜய் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
தொண்டர்கள் தம் மீது வைத்துள்ளது உண்மையான அன்பு என்றால், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை அன்புக் கட்டளையாகவோ அல்லது கண்டிப்பாகவோ கருதினாலும் அதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

