சென்னை: தவெக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
சென்னையில் உள்ள பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) வெளியானது.
இதையடுத்து, வேட்பாளர்களை கட்சித் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விஜய், இரு தொகுதிகளில் களமிறங்கும் நிலையில், தவெக பொதுச் செயலாளர் சென்னை தி.நகர் தொகுதியிலும் செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையத்திலும் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய விஜய், எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்றார்.
இந்தத் தேர்தலில் தீய சக்தியான திமுகவின் மக்கள் விரோத ஸ்டாலினா அல்லது விஜய்யா என்பதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
“இது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அல்ல, மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் என சொல்லுவார்கள். ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்றால், அனுபவத்தை வைத்து கொள்ளையடிக்காதவராக, சட்டவிரோத மணல் குவாரி வைத்திருக்காதவராக, கேள்வி கேட்கும் செய்தியாளர்களைத் தாக்காதவராக இருக்க வேண்டும்,” என்றார் விஜய்.
தொடர்புடைய செய்திகள்
இது பாமரர்களுக்கும் ஒரு அதிகார வர்க்கத்துக்கு சேவகம் செய்யும் அடிமைகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்றும் இது மன்னராட்சியில் இருந்து மக்களாட்சியை மீட்பதற்கான தேர்தல் என்றும் குறிப்பிட்ட விஜய், தமிழகத்தின் எதிர்காலத்துக்காக தவெகவுக்கு ஒரு வாய்ப்புத் தரவேண்டும் என்றார்.

