சென்னை: ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் நீண்ட காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அறவழியில் மக்களைச் சந்தித்த தனது கட்சித் தோழர்களைக் கைது செய்வதுதான் ஜனநாயகமா என்று எக்ஸ் பக்க அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையடுத்து, தமிழக ஆளுநரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மேலும், அனைத்து சூழல்களிலும் தமிழக தங்கைகளுக்கு தான் அண்ணனாகவும் அரணாகவும் இருக்கப்போவது உறுதி என்று குறிப்பிட்டு, அவர் கடிதம் ஒன்றையும் வெளியிட்டார்.
அவரது இந்தக் கடிதத்தை நகலெடுத்து தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் விநியோகித்தனர்.
இதையடுத்து, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் அக்கட்சியினர் சிலரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தமிழகத் தங்கைகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டுமென கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அக்கடிதத்தின் நகல்களை பொது மக்களிடமும் பெண்களிடமும் தவெக நிர்வாகிகள், மகளிர் அணியினர் வழங்கியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால் காவல்துறையினரோ அவர்களைக் கைது செய்து பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக கைது செய்தது கண்டனத்துக்குரியது.
“‘கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வதுதான் ஜனநாயகமா?” என்று விஜய் காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட தவெகவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

