சென்னை: வரவிருக்கும் 2026 தேர்தலில், 200க்கு 200 வெல்வோம் என்ற இறுமாப்பை மக்கள் ஒன்றில்லாமல் ஆக்கப்போகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சித் தலைவர் விஜய் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மணிப்பூரில் நடக்கும் அவலங்கள், வேங்கை வயலில் நடந்த பிரச்சினை என எதையுமே கண்டுகொள்ளாமல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு ஒரே நேரத்தில், மத்தியில் ஆளும் கட்சியையும் மாநிலத்தில் ஆளும் கட்சியையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்னும் நூல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்றது.
அந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்குப் புத்தகம் வழங்கிச் சிறப்பித்தார்.
நூலை வெளியிட்டு உரையாற்றிய விஜய், “சுய நலத்துடனான ஆட்சியாளர்களின் கூட்டணிக் கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்கள் தவிடுபொடியாக்கப் போகிறார்கள்,” என்று சூளுரைத்துள்ளார்.
“மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, மக்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத, வெறும் கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.
“நீங்கள், உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணிக் கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்கள் பொய்யாக்கி விடுவார்கள்,” என்று விஜய் கூறியுள்ளார்.
நாட்டில் நடக்கும் இது போன்ற மக்கள் விரோதச் செயல்களையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருமித்த கருத்துடன் தேர்தல் ஆணையர்கள் நியமனம்
மேலும் அவர் பேசுகையில், தேர்தல் ஆணையர்களை ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நம் நாடு முழுமையான வளர்ச்சியைப் பெற வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
ஜனநாயகத்தின் ஆணிவேர் என்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை. அது அமைய வேண்டும். அதற்கு எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், ஒருமித்த அடிப்படையில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும். முக்கியமாக இளையர்களிடையே தேர்தலின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது என்று பொருள் என்று விஜய் கூறியுள்ளார்.
அம்பேத்கர் பிறந்த நாள்
வன்மத்தை கக்கிய இந்தச் சமூகத்திற்கு, அவர் திரும்ப என்ன செய்தார் என்பதுதான் அம்பேத்கரின் சாதனை. பிறப்பால் அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டைக் கொண்டவர். அப்பேற்பட்ட அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல்14ஆம் தேதியை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டார்.