பரந்தூர் மக்களுக்குத் துணை நிற்போம்: விஜய்

2 mins read
864db975-e674-4e7d-b7ce-340c313481c3
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடி வரும் மக்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் சந்தித்துப் பேசினார். - படம்: ஊடகம்

பரந்தூர்: “திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதன் மூலம் ஆளுங்கட்சியை எதிர்த்து வந்தது. இப்போது ஆளும் கட்சியாக இருந்துகொண்டு விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

அண்மையில், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழக அரசு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டைத்தான் பரந்தூர் பிரச்சினையிலும் அரசு எடுத்திருக்க வேண்டும்; எடுக்க வேண்டும். எப்படி அரிட்டாப்பட்டி மக்கள் நமது மக்களோ, அதுபோலத்தான் பரந்தூர் மக்களும் நமது மக்கள். அப்படித்தானே ஓர் அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லையே? ஏன் செய்யவில்லை? காரணம், இந்த விமான நிலையத்தையும் தாண்டி, இந்தத் திட்டத்தில் அரசுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதை நமது மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர்.

90 விழுக்காடு விவசாய நிலங்கள், நீர்நிலைகளை அழித்து பரந்தூர் விமான நிலையத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற முடிவை எடுக்கும் எந்த அரசாக இருந்தாலும், அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும் என்று விஜய் கூறியுள்ளார்.

திங்கட்கிழமை (ஜனவரி 20) பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீண்ட நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 13 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களைத் தவெக தலைவர் விஜய் பொடவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்குத் துணை நிற்கப்போவதாக உறுதியளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்துச் சென்னையை நிரந்தர வெள்ளக்காடாக்கும் இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பதில் தவெக உறுதியாக உள்ளது என்று விஜய் பரந்தூர் மக்களிடம் தெரிவித்தார்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தைக் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 13 ஊர்களில் 5,100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம நிலங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த ஊரை மையமாக வைத்து 910வது நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்