கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

2 mins read
c7109891-0fc9-4c47-994b-269874268c24
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லையென பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி வைத்திருக்கவில்லை என துணைப் பொதுச்செயலாளர் சிடி நிர்மல் குமார் தெரிவித்ததை அடுத்து, அந்தக் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

கூட்டணிகுறித்துப் பேசுவதற்கான அதிகாரம் தவெக தலைவரிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) செய்தியாளர்களுக்குத் தமிழிசை அளித்த பேட்டியில், “பாஜகவுடன் கூட்டணி இல்லையெனத் தவெக சார்பாக விஜய்யிடமிருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. யாரோ ஒருவரின் கருத்தைக் கட்சியின் நிலைப்பாடாகப் பார்க்க முடியாது,” என்றார்.

பாஜக கூட்டணி தொடர்பான முடிவுகளை அகில இந்திய தலைமையகமே எடுக்கும் என்று தெரிவித்த தமிழிசை, தற்போது தேசியவாத சக்திகள் ஒன்று சேரவேண்டிய சூழல் வந்துள்ளது என்பது எனது கருத்து. கூட்டணிக்கு யாரிடம் பேசுவது, எப்படிப் பேசுவது என்பது குறித்து தலைமை முடிவு செய்யும்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை எதிர்க்கும் கொள்கை கோட்பாடுகள், ஒருமைப்பாடு உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தன் விருப்பம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கல்விக் கொள்கை பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் பரப்பப்படுகிறது. ஒரு நல்ல திட்டம்பற்றி நஞ்சு கக்கப்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நாடாளுமன்றக் குழுவை உலக நாட்டிற்குப் பிரதமர் அனுப்புகிறார். நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் அனைவரும் இப்படித்தான் இணைந்து பணியாற்ற வேண்டும்.

காங்கிரஸ் மாதிரி அனைத்திற்கும் குற்றஞ்சாட்டக் கூடாது. ‘இந்தியா கூட்டணி’ ஒரு பலமிழந்த கூட்டணி. திமுகவை மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்