சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 28 வயதான கே. மகேந்திரன் என்பவர் விஜய்யின் தீவிர ரசிகர் மற்றும் தவெக தொண்டர் எனக் கூறப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சற்று முன்பாக, தேர்தல் முடிவுகள் குறித்த பல்வேறு வதந்திகள் பரவின.
அதில், தவெக பின்னடைவைச் சந்திப்பதாக வெளியான தகவல்கள் மகேந்திரனை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகத் தெரிகிறது.
அதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வீட்டின் அருகே கழுத்தை அறுத்துத் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.
ரத்தம் சொட்டச் சொட்ட கிடந்த மகேந்திரனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரசிகர் மகேந்திரனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

