தவெக ஆட்சியில் அண்ணன் சீர், பெண்கள் படை, தாய்-பாதுகாவலர் உதவித்தொகை: விஜய்யின் அதிரடி அறிவிப்புகள்

தவெக ஆட்சியில் அண்ணன் சீர், பெண்கள் படை, தாய்-பாதுகாவலர் உதவித்தொகை: விஜய்யின் அதிரடி அறிவிப்புகள்

2 mins read
61e529a5-5e5a-45f0-97f2-25776aadd16f
மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் தவக பெண் தொண்டர்கள், ரசிகைகளுடன் தம்படம் எடுத்துக்கொண்ட அக்கட்சித் தலைவர் விஜய். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் மகளிர் நலம் பேண தனித்துறை அமைக்கப்படும் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தவெக மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் பேசியபோது, அண்ணன் சீர், தாய்மாமன் சீர் உள்ளிட்ட மேலும் பல தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தார்.

திமுக, அதிமுகவின் வாக்குறுதிகளை மீறி, பெண்கள், மாணவர்களைக் கவரும் வகையில் அவரது அறிவிப்புகள் இருந்தன.

மேலும், இளையர்களைக் குறிவைத்து தவெக தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

மகளிர் தின நிகழ்வில் பேசிய திரு விஜய், பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனித்துறை உருவாக்கப்படும் என்றும் இத்துறை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் என்றும் கூறினார்.

60 வயது வரை உள்ள அனைத்துப் பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் இதில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“’அன்னபூரணி சூப்பர் 6’ திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆறு சமையல் எரிவாயு உருளைகள் விலையில்லாமல் வழங்கப்படும். ‘அண்ணன் சீர்’ திட்டத்தின்கீழ் திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கம், பட்டுச் சேலை வழங்கப்படும்.

“காமராஜர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், மாணவிகள் கல்வியைப் பாதியில் நிறுத்துவதை தடுக்கும் வகையில், அதற்குக் காரணமாக இருக்கும் பொருளியல் தடையை உடைக்க, பெண்களைப் படிக்க வைக்கும் ஒவ்வொரு தாய், பாதுகாவலருக்கும் ரூ.15,000 உதவித் தொகை வழங்கப்படும்,” என்று விஜய் அறிவித்தார்.

நடப்பு திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 இனி ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. தற்போது அதற்குப் போட்டியாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என தவெக அறிவித்துள்ளது.

மேலும், தாய், பாதுகாவலர் தொகை என்ற புதிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

“பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வெற்றிப் பயணம் திட்டத்தின்கீழ் அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் இன்றி பயணம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.

“ராணி வேலு நாச்சியார் படை உருவாக்கி, சீருடையில் கேமரா பொருத்தப்பட்டு, பெண் படை செயல்படும். அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

“பொதுப் போக்குவரத்து வாகனங்களில் அவசர அழைப்பு பொத்தான் உருவாக்கப்படும். 5 நிமிடத்தில் பதிலும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்,” என்றார் விஜய்.

‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்