சிவகங்கை: காரைக்குடியில் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், அங்கு கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள் மத்தியில் எதுவும் பேசாமல் கிளம்பிச் சென்றதால் அனைவரும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகே, விஜய் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்குச் சென்றார் விஜய். பின்னர் அங்கிருந்து பிரசார வாகனம் மூலம் காரைக்குடிக்குப் பயணமானார்.
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் திரளாகக் கூடி, அவருக்கு வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
பிரசார வாகனம் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடை போன்ற பகுதியில் நின்றபடி, ஏறக்குறைய நான்கு மணிநேரம் சாலைவலம் மேற்கொண்டார் விஜய்.
இதன் காரணமாக அவரால் குறித்த நேரத்துக்கு காரைக்குடியைச் சென்றடைய முடியவில்லை. அங்கு நண்பர்கள் 12 மணி முதல் 2.30 மணி வரைதான் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், பிற்பகல் 2.40 மணிக்குத்தான் அவர் காரைக்குடி சென்றடைந்தார். நேரமாகிவிட்டதால் அத்தொகுதி வேட்பாளர் பிரபுவை அறிமுகம் செய்த கையோடு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் விஜய். இதனால் கடும் வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
முன்னதாக, மதுரையில் இருந்து காரைக்குடி சென்றபோது விஜய்யின் பிரசார வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த இருசக்கர வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், விஜய்யின் வாகனம் நிற்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

