இரண்டாவது முறையாகச் சந்தித்த விஜய்: கேள்விகளை அடுக்கிய ஆளுநர்

இரண்டாவது முறையாகச் சந்தித்த விஜய்: கேள்விகளை அடுக்கிய ஆளுநர்

2 mins read
f50a305d-85b6-46d4-8700-e67edb95ce82
விஜய்யுடன் அக்கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் வியாழக்கிழமை (மே 7) ஆளுநரை மீண்டும் சந்தித்தனர்.  - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநரை வியாழக்கிழமை (மே 7) இரண்டாவது முறையாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆட்சி அமைக்க உரிமை கோரி புதன்கிழமை ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பிய பின்னர், அவர் முதல்முறையாக ஆளுநர் அர்லேக்கரை சந்தித்தார்.

அப்போது சட்டமன்றத்தைக் கூட்டி தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு நாள்கள் அவகாசம் அளித்தார் ஆளுநர். இத்தகவல் வெளியானதை அடுத்து தமிழக அரசியம் களம் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சூடுபிடித்தது.

முதற்கட்டமாகத் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. அக்கட்சியிடம் ஐந்து எம்எல்ஏக்கள் உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிடமும் திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் ஆதரவு கோரியது தவெக.

தேர்தலுக்கு முன்புவரை தனித்து ஆட்சியமைப்போம் என்றுகூறி வந்த தவெக, தற்போது அக்கட்சியைக் கடுமையாக விமர்சித்த சிறு கட்சிகளிடமே ஆதரவு கேட்டுள்ளது.

இந்நிலையில் 113 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறியது தவெக தலைமை. விஜய்யுடன் அக்கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் வியாழக்கிழமை (மே 7) ஆளுநரை மீண்டும் சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு திரு விஜய் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஆளுநர் இக்கோரிக்கையை ஏற்கவில்லை என்றும் பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதி செய்ய ஆதரவளிக்கும் எம்எல்ஏக்கள் பட்டியலைக் கட்சி வாரியாக அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே அரசு கவிழ்வதை ஆளுநர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்க்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமை நடைபெறும் எனக் கருதப்பட்ட விஜய் பதவியேற்பு விழாவும் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் தலைவர்களுக்கும் தன்னைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் அர்லேகர்.

குறிப்புச் சொற்கள்