சென்னை: வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம்காணவுள்ளது.
இந்நிலையில், அத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, இல்லை மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து விஜய் ஆலோசித்து வருவதாகத் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஏற்கெனவே திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் மூன்று கூட்டணிகள் இயங்கி வருகின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் எல்லாத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு வருகிறது.
திமுக, பாஜக கூட்டணிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே விஜய் கையிலெடுப்பார் எனச் சொல்லப்படுகிறது. அதனால், அதிமுக அல்லது நாம் தமிழர் கட்சியுடன் அவர் கைகோக்கலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் தமிழகத்தில் ஐந்து மண்டல மாநாடுகளையும் பத்து மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களையும் நடத்த விஜய் முடிவுசெய்துள்ளார். இந்நிலையில், நூறு தொகுதிகளில் நடைப்பயணம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலம் முழுவதும் தன் ரசிகர்களையும் கட்சியில் சேரும் இளையர்களையும் ஒன்றுதிரட்டும் நோக்குடன் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கேதுவாக, தன் கட்சியில் இளைஞரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி என 30 அணிகளை உருவாக்கவும் 200,000 நிர்வாகிகளை நியமிக்கவும் அவர் திட்டமிட்டு வருகிறார்.
விஜய் நடித்துவரும் ‘தி கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைகாணவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன்பிறகு, அக்டோபர் மாதத்தில் மதுரையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்த விஜய் முடிவுசெய்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் பல அறிவிப்புகளை அம்மாநாட்டில் அவர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் தேர்தலிலேயே வெற்றியைக் குறிவைத்துக் களமிறங்கவுள்ளார் விஜய். அதனால், ஒருவேளை கூட்டணி அமைத்துப் போட்டியிடும் சூழல் ஏற்பட்டாலும் தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடனேயே அவர் கைகோக்க வேண்டும் என்பதில் அவருடைய ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.

