தொண்டர்களைக் குவிக்க விஜய் திட்டம்: நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை

1 mins read
f7917683-8165-4ff4-b57e-7fa75b7729ba
விஜய். - படம்: ஊடகம்

சென்னை: கட்சி மாநாடு குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

செப்டம்பர் 23ஆம் தேதி அன்று, தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார் விஜய்.

இதில், ஐம்பதாயிரம் பேர் வரை பங்கேற்க காவல்துறை அனுமதி வழ்கியுள்ளது. எனினும், மாநாட்டுக்கு மேலும் அதிக எண்ணிக்கையில் தொண்டர்களை அழைத்துவர கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர்.

எனவே, காவல்துறையிடம் இது தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் விஜய்.

காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக தொண்டர்களை மாநாட்டிற்கு அழைத்து வருவது, உணவு விநியோகம், தொண்டர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் மாநாட்டிலேயே தமிழக மக்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக கவர வேண்டும் என விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான ஒன்றிரண்டு அறிவிப்புகளும் மாநாட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்