அஜித்துக்கு நீதி கேட்டு விஜய் போராட்டம்

அஜித்துக்கு நீதி கேட்டு விஜய் போராட்டம்

2 mins read
bb90ab29-71fc-462f-a54c-567ae9cd5060
விஜய் அரசியலில் நுழைந்த பிறகு அவரது தலைமையில் நடைபெற்ற முதல் ஆர்ப்பாட்டம் இதுவாகும். - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: திருப்புவனம் இளையர் அஜித்குமார் போல், தமிழகத்தில் காவல்துறை செய்த கொடுமையால் உயிரிழந்த அனைவரது குடும்பத்தாரிடமும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இளையர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம்போல், காவல்துறையின் விசாரணைக் காவலில் இருந்தபோது உயிரிழந்த எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும் உயர் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க வலியுறுத்தியும் காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தவெக சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் அக்கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். இது விஜய் அரசியலில் நுழைந்த பிறகு அவரது தலைமையில் நடைபெற்ற முதல் ஆர்ப்பாட்டம் ஆகும். அப்போது திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.

“அஜித்குமார் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளையர். அந்த குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு தமிழக முதல்வர் மன்னிப்பு (Sorry) தெரிவித்தார். அதில் தவறில்லை. ஆனால் இதே ஆட்சியில் 24 இளையர்கள் இதேபோல் இறந்திருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தாரிடமும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

“முன்பு சாத்தான்குளம் பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது, அது மாநில அரசுக்கு அவமானம் என்று சொன்னார் ஸ்டாலின். இன்று அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது அவமானம் இல்லையா?

“திமுக அரசு நிர்வாகத் திறனற்று இருக்கிறது. இது திராவிட மாடல் ஆட்சியல்ல, ‘சாரிமா’ மாடல் ஆட்சி.

“எல்லாவற்றுக்கும் நீதிமன்றம்தான் தலையிட்டுக் கேள்வி கேட்கிறது. சாத்தான்குளம் வழக்கு, அண்ணா பல்கலை வழக்கு, அஜித்குமார் வழக்கு என நீதிமன்றம்தான் தலையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

“எல்லாவற்றிலும் நீதிமன்றம்தான் தலையிட வேண்டும் என்றால், முதல்வர் எதற்கு? உங்களுடைய ஆட்சி எதற்கு?” என்று பல்வேறு கேள்விகளை அடுக்கினார் விஜய்.

ஆர்ப்பாட்டத்தின்போது, ‘மன்னிப்பு வேண்டாம், நீதி வேண்டும்’ என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, விஜய் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை 16 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது.

அதேபோல், தவெக தொண்டர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, கட்டுக்கோப்பாகச் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அறிவுரைகளும் அக்கட்சித் தலைமையால் வழங்கப்பட்டிருந்தன.

குறிப்புச் சொற்கள்