சென்னை: கரூர் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை கைப்பேசி காணொளி மூலம் தொடர்புகொண்டு நடிகர் விஜய் உருக்கமாகப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அவர் கண்கள் கலங்க மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக அங்கிருந்து சென்னை திரும்பிய விஜய், பத்து நாள்களுக்கு மேலாக தன் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இடைப்பட்ட நேரத்தில், அவர் சில வரிகள் பேசும் ஒரேயொரு காணொளி மட்டுமே வெளியானது. இதையடுத்து அவரை அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஒருவரின் தாயாரை தொடர்புகொண்டு பேசியுள்ளார் விஜய்.
அப்போது, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விரைவில் கரூர் வந்து அனைவரையும் சந்திக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“என்னை உங்கள் தம்பியாக நினைத்து மன்னித்துவிடுங்கள். கரூருக்கு வரமுடியாத சூழலில் நான் சென்னை வந்துவிட்டேன்.
“நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விரைவில் வருகிறேன். உங்கள் இழப்பு தாங்க முடியாத ஒன்று. என்னை மன்னித்துவிடுங்கள்,” என்று விஜய் பாதிக்கப்பட்ட மேலும் பலரிடம் பேசும்போது உருக்கத்துடன் கூறியதாகத் தெரிகிறது.
இதனிடையே, விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறத் திட்டமிட்டுள்ளார். எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக காவல்துறை தலைவருக்கு தவெக கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும், டிஜிபியை நேரில் சந்தித்து கடிதம் அளிக்க இருப்பதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் பேசினார். அப்போது அனைவருமே, ‘விஜய் மீது எந்தத் தவறும் இல்லை, நீங்கள் துணிவுடன் இருக்க வேண்டும். தொடர்ந்து போராட வேண்டும். நாங்கள் உங்களுக்குத் துணை நிற்போம்’ என்று கூறினார்.
“மிக விரைவில் விஜய் உரிய பாதுகாப்போடு மக்களைச் சந்திப்பார்,” என தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, தவெக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை அக்டோபர் 10ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.
முன்னதாக, இதே கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. தமிழக காவல்துறையின் விசாரணை தொடக்க நிலையில் இருக்கும்போதே சிபிஐ விசாரணை கோருவது சரியல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.