சென்னை: தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் சி.ஜோசஃப் விஜய் இன்று (மே 10) பதவியேற்றார். அவருக்குத் தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு சிறப்பித்தார். ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும் ஆதரவாளர்களும் பங்கேற்ற பதவியேற்பு விழாவைச் சென்னையில் 20 இடங்களில் பெரிய திரை அமைத்துப் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஜய் பதவியேற்ற பின்னர் அவருடன் கைகுலுக்கி ஆதரவு தெரிவித்தார் ராகுல் காந்தி. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் திரு விஜய் தலைமையில் 9 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அடுத்த சில நாள்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு நிகழ்வில் விஜய்யின் பெற்றோர் கலந்துகொண்டனர். அரசியல் தலைவர்களும் தொழில்துறையினரும் நடிகை திரிஷா, நடிகர் ஜெய் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர்.
முன்னதாகத் திரு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தமது மகன் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் முதல்வர் விஜய் தமிழக மக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் தெரிவித்திருந்தார்.

