சென்னை: தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் சி.ஜோசஃப் விஜய் ஞாயிற்றுக்கிழமை (மே 10) பதவியேற்றார். அவருக்குத் தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு சிறப்பித்தார். ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும் ஆதரவாளர்களும் பங்கேற்ற பதவியேற்பு விழாவைச் சென்னையில் 20 இடங்களில் பெரிய திரை அமைத்துப் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஜய் பதவியேற்ற பின்னர் அவருடன் கைகுலுக்கி ஆதரவு தெரிவித்தார் ராகுல் காந்தி. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் திரு விஜய் தலைமையில் 9 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அடுத்த சில நாள்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசஃப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்து ஒலிக்கு மத்தியில் பதவியேற்றார் விஜய்.
‘சி.ஜோசஃப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி எடுத்துக்கொண்டபோது தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.
பதவியேற்பு நிகழ்வில் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை திரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாகத் திரு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தமது மகன் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் முதல்வர் விஜய் தமிழக மக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் தெரிவித்திருந்தார்.

