சென்னை: தமது எம்எல்ஏ பதவியிலிருந்து விலகுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவரது பதவி விலகல் ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் 25 பேர் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஆதரவாக வாக்களித்தனர். எனினும், அதிமுகவினரை தனது அமைச்சரவையில் சேர்க்க விஜய் மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியானது.
இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அதிமுகவுக்குத் திரும்பினர். ஆனால், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகிய இருவர் மட்டும் பழனிசாமிக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகியுள்ளார் விஜயபாஸ்கர். அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அளித்தார்.
அவரது கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வந்த விஜயபாஸ்கர், எம்எல்ஏ பதவியிலிருந்து விலகும் முன்பு, “தொண்டர்கள் மனத்தை வெல்ல முடியாத தலைவர், மக்கள் மனத்தை எவ்வாறு வெல்ல முடியும்,” எனப் பதிவிட்டிருந்தார்.

