சென்னை: விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசியல் மற்றும் திரைத்துறையினர் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும் ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். நினைவு தினத்தை தேமுதிக, குருபூஜையாக அனுசரித்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும் தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கட்சியின் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள விஜயகாந்தின் முழுஉருவச் சிலைக்கு பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, அவர் தலைமையில், கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், கருநாகராஜன் ஆகியோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
திரைப் பிரபலங்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் பல்வேறு சமூக நலப்பணியில் முன்னணி வகிக்கும் சமூகத் தலைவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, விஜயகாந்தின் பணிகள் மற்றும் சமூக பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தவெக தலைவரும் நடிகருமான விஜய் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி,” என்று தெரிவித்துள்ளார்.

