திருப்பூர்: தவெக தலைவர் விஜய் திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டபோது அக்கட்சி வேட்பாளர் உட்பட ஒன்பது பேர் மயக்கமடைந்தனர். அவர்களில் ஏழு பேர் பெண்கள்.
ஒன்பது பேருக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) பிரசாரம் மேற்கொண்டார்.
கடுமையான நிபந்தனைகளுடன் காவல்துறை பிரசாரத்துக்கான அனுமதியை வழங்கியிருந்தது.
சேலம் ஆறுவழிச்சாலை வழியாக திருப்பூருக்குச் சென்ற விஜய்யை வரவேற்க, வழிநெடுகிலும் ஏராளமானோர் காத்திருந்தனர்.
பெருமாநல்லூர் பகுதியில் விஜய் வருகைக்காக கடும் வெயிலில் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்த நிலையில், தவெக சார்பில் குடிநீரும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
எனினும், கடும் வெயிலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். ஏழு பெண்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் மயக்கமடைந்த நிலையில், தவெக வேட்பாளர் சுகுமாரும் மயக்கமடைந்தார்.
கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து, பிரசாரத்துக்கு குழந்தைகளுடன் வரவேண்டாம் எனத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டும்கூட, பலர் இத்தவற்றைச் செய்வதாக தவெக நிர்வாகிகள் வருத்தத்துடன் குறிப்பிட்டனர்.

