விஜய்க்கு உடல்நலப் பாதிப்பு: தொண்டர்கள் கவலை

விஜய்க்கு உடல்நலப் பாதிப்பு: தொண்டர்கள் கவலை

2 mins read
13a4e465-7eb0-4583-a1ce-fa077886c474
விஜய். - கோப்புப் படம்: தினமலர்

சென்னை: தவெக தலைவர் விஜய் உடல்நலம் குன்றியிருப்பதால் அவர் அடிக்கடி சோர்வடைவதாகவும் அதன் காரணமாக அவரது பிரசார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பதாகத் தவெக தரப்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

ஆளும் தரப்பின் கடும் அழுத்தம் காரணமாகவே, அதிகாரிகள் தவெகவுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், விஜய்க்கு ‘டைப்-3’ நீரிழிவு நோய்ப் பாதிப்பு இருப்பதாகவும் இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

நீரிழிவு காரணமாக பிரசாரத்தின்போது விஜய்யின் இடது கால் பாதம் மரத்துப் போவதாகவும் உடல் சோர்வு அதிகரிப்பதாகவும் தெரிகிறது. உடல் சோர்வு காரணமாகவும் அவர் அவ்வப்போது முடங்கிப்போகிறார்.

எனவே, ஒருநாள் பிரசாரம் செய்தால் அடுத்த நாள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது எனத் தவெக நிர்வாகி ஒருவர் கூறியதாகத் தமிழக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலூர், கும்மிடிப்பூண்டி, காரைக்குடி எனப் பல பகுதிகளில் விஜய் மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட காவல்துறை காரணமன்று என்றும் விஜய்யின் உடல்நலம் ஒத்துழைக்கவில்லை என்பதே உண்மை என்றும் கூறப்படுகிறது.

தொடர் விமானப் பயணங்கள், சாலைப் பிரசாரக் கூட்டங்கள் என நாள் முழுவதும் பரபரப்பாக இருப்பதால் விஜய் சோர்ந்துவிடுகிறார் என்றும் சில நேரங்களில் வெயிலால் ஏற்படக்கூடிய நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுகின்றன என்றும் ஊடகத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.

விஜய்யின் உடல்நலம் குறித்த இத்தகவல்கள் தவெக தொண்டர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்