இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்

கோப்புப் படம்: ஒன் இந்தியா தமிழ்

06 Oct 2026 - 7:28 pm

1 mins read

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம், அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் முதன்மையான வாழ்வாதாரமாக விளங்கும் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து பறிமுதல் செய்து வருவதால் மீனவக் குடும்பங்கள் கடுமையான பொருளியல் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளதாக திரு விஜய் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ராமேசுவரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிய அவர், தற்போது இலங்கைச் சிறையில் வாடும் 20 தமிழக மீனவர்களையும் அவர்களின் 270 மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர, ஆக்கபூர்வமான தீர்வுகாணும் வகையில் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவை சீரமைத்து, உடனடியாகப் பேச்சு வேண்டும் என்றும் திரு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்