விஜய்யின் வேட்புமனு வழக்கு: தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

விஜய்யின் வேட்புமனு வழக்கு: தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

2 mins read
cb02f031-1a63-4f44-a68a-1ce4e9f775f8
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றுகிறார். - படம்: பிடிஐ புகைப்படம்/ டெக்கான் குரானிக்கல்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்துள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) தள்ளுபடி செய்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

இந்த இரு தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் உள்ள தகவல்கள் முரணாக இருப்பதாகவும் இதுகுறித்து வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் ஏற்கெனவே கோரிக்கைகள் எழுந்தன.

இந்தச்சூழலில், பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் வெங்கடேஷ் என்பவர் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், “விஜய்-சங்கீதா தம்பதி விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அப்படி இருக்கும்போது, மனைவிக்குக் கடன் கொடுத்திருப்பதாக விஜய் கூறுவது நம்பும்படியாக இல்லை.

“இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் செயல், எனவே அவர் மீது விசாரணை நடத்தவேண்டும்.

“மேலும், ஒரு தனியார் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட ரூ.20 கோடி தொடர்பான சரியான விளக்கங்களும் மனுவில் இல்லை,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதேபோன்ற ஒரு கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.

“ஒரே காரணத்திற்காக மீண்டும் மீண்டும் தொடரப்படும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்கமுடியாது,” எனக் கூறி வெங்கடேஷின் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தனர்.

இதன்மூலம் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், விஜய் தரப்பிற்கு ஒரு பெரிய சட்டச் சிக்கல் நீங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்