மதுரை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) மதுரையில் நடைபெற உள்ளது.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்றன. பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு விட்டது. மாநாடு பிற்பகல் 3.15 மணி முதல் இரவு 7.15 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை- தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த முடிவை தனியார் பள்ளிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு, அங்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. மாநாட்டு திடலின் ஒரு பகுதியில் பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் போன்ற தலைவர்களுடன் விஜய் நிற்பது, வாழ்த்து பெறுவது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக. மாநாட்டு மேடை உச்சியில் செய்யப்பட்டுள்ள அலங்கார ஏற்பாடுகளில், அண்ணா, எம்.ஜி.ஆர். படங்களுடன் விஜய் இருப்பது போன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, விஜய் வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்றும் எழுதப்பட்டுள்ளன.
100 அடி கொடிக்கம்பம் சாய்ந்தது
மாநாட்டு முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு தொடங்கும் போது கொடியை விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக கொடிக்கம்பத்தை ராட்சத கிரேன் மூலம் நடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்தது.
தவெக நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கிரேனில் உள்ள பெல்ட் அறுந்ததில் கொடிக்கம்பம் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீழே விழுந்த கொடிக்கம்பத்தை மீட்டு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தவெக முதல் மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற்றது.