திருத்தணி: விஜய்யின் தன்னம்பிக்கை தம்மை வியக்க வைத்ததாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது.
திங்கட்கிழமை (மே 4) காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 7 மணியளவில் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்.
அவர் 100 ரூபாய் கட்டணச் சேவையில் சுப்பிரமணிய சாமியை வேண்டினார். தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமானையும் வழிபட்டார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டி அவர் சாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்ததும் கோவில் வளாகத்தில் சுமார் 10 நிமிடங்கள் அவர் தியானம் செய்தார்.
பின்னர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “தேர்தல் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. கூட்டணி இல்லாவிட்டாலும் தேர்தலைச் சந்திக்கும் தைரியம் விஜய்யிடம் இருந்தது. தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற விஜய்யின் தன்னம்பிக்கை வியப்பு அளிக்கிறது,” என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறினார்.
“தவெக 100 விழுக்காடு வெற்றிபெறும் என 100 விழுக்காடு விஜய் நம்பினார். விஜய் பெற்றுள்ள வெற்றியைக் குறித்து ஒரு தந்தையாக பெருமை கொள்கிறேன். விஜய் பெற்றுள்ள வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது.
“விஜய்யை முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்கள் கனவை விஜய் நிறைவேற்றுவார். அவரைத் தலைவராக மக்கள் பார்க்கவில்லை. தங்களில் ஒருவராகப் பார்த்தனர்,” என்றார் அவர்.

