நீலகிரி: மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் முதல்வர் விஜய்க்குப் புதிதாக மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி படகு இல்லம் அருகே, தமிழகச் சுற்றுலாத்துறை, தனியார் பங்களிப்புடன் அனைத்துலக மெழுகுச் சிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
இங்கு பிரதமர் மோடி, முன்னாள் அதிபர் அப்துல் கலாம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புட்டின், அன்னை தெரசா, திரையுலகப் பிரபலங்கள் ரஜினிகாந்த், மம்முட்டி, மோகன்லால், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் மெழுகுச் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், தற்போது தமிழக முதல்வர் விஜய்யின் மெழுகுச் சிலையும் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. ‘கோட்-சூட்’ அணிந்தபடி கம்பீரமாக நிற்கும் தோற்றத்தில், மிகவும் தத்ரூபமாக அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள், படகுச்சவாரியை முடித்துவிட்டு அருங்காட்சியகத்துக்கு ஆர்வத்துடன் வருகின்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள முதல்வர் விஜய்யின் சிலையை வியப்புடன் கண்டு ரசிப்பதுடன், அதன் அருகில் நின்று ஆர்வத்துடன் ‘செல்ஃபி’, புகைப்படங்களை எடுத்து மகிழ்கின்றனர்.
ஊட்டியில் நிலவும் இதமான குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை காரணமாக, இந்த மெழுகுச் சிலைகள் உருகாமல் மிகத் துல்லியமாகவும் திடமாகவும் காட்சியளிக்கின்றன.
இந்த மெழுகுச் சிலை, ஊட்டி சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
