தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்த எம்எல்ஏ காலமானார்

தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்த எம்எல்ஏ காலமானார்

படம்: எக்ஸ்

06 Apr 2024 - 7:46 pm

2 mins read

சென்னை: விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி சனிக்கிழமை (ஏப்ரல் 6) காலமானார். அவருக்கு வயது 71.

கடந்த 2019ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் திரு புகழேந்தி. ஆயினும், அதன்பின் 2021ல் நடந்த தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவானார்.

இந்நிலையில், கடந்த பத்து நாள்களுக்குமுன் திடீரென அவரது உடல்நலம் குன்றியது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பிய திரு புகழேந்தி, மறுநாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழ, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றியிருந்த புகழேந்தி, தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். உடல்நலம் தேறி மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

“மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தி அவர்களது மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்,” என்று முதல்வர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்