விழுப்புரம்: இம்மாதம் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு செய்யப்படவிருக்கும் ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுப்பி இருக்கிறது.
அக்கேள்விகளுக்கு ஐந்து நாள்களுக்குள் பதிலளிக்க அது அறிவுறுத்தியுள்ளது.
தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி கூட்டுகிறார் நடிகர் விஜய். இதற்காக அனுமதி கோரி ஆகஸ்ட் 28ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் அக்கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அன்றே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து காவல்துறை வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, மாநாடு நடத்த தேர்வு செய்யப்பட்ட இடம் தேசிய நெடுஞ்சாலைக்கும், ரயில் பாதைக்கும் இடைப்பட்டதாகும். இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட ஆழமான கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளை மூடவேண்டும். மேலும், ஒருவர் அமர 10 சதுர அடி இடம் தேவைப்படும். மேடைக்கு எதிரே ஐந்து ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டாலும் ஒரு ஏக்கருக்கு 4,300 பேர் வரை அமரலாம். அதன்படி ஏறக்குறைய 300,000 பேர் வரை மாநாட்டுத் திடலில் அமரலாம்.
தென்மாவட்டங்களில் தொகுதிக்கு 500 பேர் என 100 தொகுதிகளுக்கு 50,000 பேரும், எஞ்சிய 134 தொகுதிக்கு ஆயிரம் பேர் வீதம் 134,000 பேரும் வரக்கூடும். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் வரலாம். இவை அனைத்தையும் சேர்த்தால் மாநாட்டுக்கு 190,000 பேர் வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
வாகனங்களை நிறுத்துவதற்காக 28 ஏக்கர் நிலமும், சென்னை, புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 40 ஏக்கர் நிலமும், இருசக்கர வாகனங்களை நிறுத்த தனியாக 3 ஏக்கர் நிலமும் தயார் செய்யப்படுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். தீயணைப்பு வாகனம், மருத்துவ வாகனம், காவல்துறை வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்குமுன் உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் தேமுதிக மாநாடு நடத்தப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, எல்லா விஷயங்களையும் ஆய்வு செய்துதான் மாநாட்டுக்கான அனுமதி வழங்கப்படும் என காவல்துறை கூறியதாக அறியப்படுகிறது.

