பிரசார விதிமீறல்; முதல் நாளே விஜய் மீது வழக்கு

பிரசார விதிமீறல்; முதல் நாளே விஜய் மீது வழக்கு

2 mins read
ffc694df-c793-4260-b2b4-e010fffb1838
விஜய்யும் அவரைக் காணத் திரண்ட மூவாயிரம் பேரும் போக்குவரத்துக்குத் தடையாக இருந்தனர் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. - படம்: தினமணி

சென்னை: தேர்தல் பிரசார விதிமுறைகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் குமார், இதுகுறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், விஜய்யும் அவரைக் காணத் திரண்ட மூவாயிரம் பேரும் போக்குவரத்துக்குத் தடையாக இருந்தனர் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக 5,000 பேர் கூடி, 30 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி, சாலைப் பிரசார நிகழ்ச்சியை நடத்தி போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தியதாக உதவி தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். பிரசாரத்தின்போது அவ்வழியே செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் வாகனத்தின் பாதையை மறைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய முதல் நாளன்றே விஜய் மீது வழக்குப் பாய்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் தவெக தலைவர் விஜய். இதையடுத்து, பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அவர், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது திரு விஜய் தேர்தல் விதிகளை மீறியதாக தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழு அதிகாரி அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், கொளத்தூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது என்ன நடந்தது என்பது குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்தும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு பொறுப்பு காவல்துறை தலைவர் ஆகியோரிடம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்