சென்னை: எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, அங்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கூ. பிரேம்குமாருக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
சகோதரருக்காகக் களம் இறங்கும் விஜய்
இதுதொடர்பாக விஜய் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ.பிரேம்குமார், நமது ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி, நமது குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஆவார்.
“எனவே, அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘தொலைக்காட்சிப் பெட்டி’ சின்னத்தை தமிழக வெற்றிக் கழகம் ஒருமனதாக ஆதரிக்கிறது.
“மேலும், பிரேம்குமாரை தவெகவின் அதிகாரபூர்வ வேட்பாளராகக் கருதி, அவரது சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்,” எனத் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எடப்பாடி தொகுதியில் தவெகவின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்தப் பிரேம்குமாரின் வெற்றி ஒரு சரியான பாடமாக அமையட்டும் என்றும் விஜய் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அருண் குமார் தமது வேட்பு மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்யாததாலும், பரிசீலனையின்போது நேரில் வராததாலும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல், மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவிலும் போதிய பரிந்துரைகள் இல்லாததால் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டிருந்த தவெகவுக்கு எடப்பாடியில் ஏற்பட்ட இந்தச் சிக்கலால் தற்போது 233 தொகுதிகளில் மட்டுமே நேரடிப் போட்டி உள்ளது.
இதனைச் சரிசெய்யவே, அங்குள்ள சுயேச்சை வேட்பாளரைத் தனது ஆதரவு வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

