எம்ஜிஆரிடம் எடுபடாத வாக்குப்பதிவு சுழற்சி

எம்ஜிஆரிடம் எடுபடாத வாக்குப்பதிவு சுழற்சி

3 mins read
9172f25d-a30a-41ed-85c9-958e0e71c51e
2026 சட்டமன்றத் தேர்தலில் 85.15 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக இறுதி நிலவர அறிவிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. - படம்: செயற்கை நுண்ணறிவு

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் முதல்முறை அதிக விழுக்காடு வாக்குகள் பதிவானதற்கு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒவ்வொரு வாக்காளருக்கும் ‘சல்யூட்’ அடிப்பதாகக் கூறியுள்ளார்.

அதேநேரம், சிறு சலசலப்புகளைத் தவிர அமைதியாக வாக்குப்பதிவு முடிவடைந்ததற்காகத் தமிழ்நாடும் தனது வாக்காளர்களுக்கு ‘சல்யூட்’ அடித்துள்ளது. மேற்கு வங்க முதற்கட்ட வாக்குப்பதிவில் வேட்பாளர்கள் தாக்கப்படுவது போன்ற வன்செயல்கள் நிகழ்ந்தபோதும் தமிழகத்தில் எப்போதும்போல அமைதி நிலவியது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 85.15 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதிகமான விழிப்புணர்வு நிலவியபோதும் ஏறத்தாழ 90,000 பேர் வாக்களிக்கவில்லை.

2021 தேர்தலைக் காட்டிலும் கிட்டத்தட்ட 12 விழுக்காடு கூடுதலாகப் பதிவானாலும் அதிகமாக வாக்களித்தோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 லட்சம். இந்த அதிகரிப்பு, தேர்தலுக்குத் தேர்தல் நடக்கக்கூடியதுதான். உயிரிழந்தோர், முகவரி மாற்றாதோர், இரு இடங்களில் வாக்குரிமை வைத்திருந்தவர்கள் என ஏறத்தாழ 74,000 பேர் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கையில் நீக்கப்பட்டதால் வாக்குப் பதிவில் சாதனை நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதைத் தவிர, புதிய எழுச்சி எதுவும் அதற்குக் காரணமில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் 90%, அசாமில் 86%, 1987க்குப் பிறகு கேரளாவில் 80% என எல்லா இடங்களிலும் மாற்றம் நிகழ்ந்திருப்பதை அதற்கு உதாரணமாகக் கூறுகிறார்கள் அவர்கள்.

சென்னை மாவட்டத்தில் 2021 தேர்தலில் 24.16 லட்சம் பேர் வாக்களித்த நிலையில் தற்போதைய தேர்தலில், குறைவாக 23.69 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்தனர். ஆனால், வாக்குப்பதிவு விகிதம் கடந்த தேர்தலில் 60%ஆகவும் இந்தத் தேர்தலில் 83.15%ஆகவும் தலைகீழாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் நீக்கப்பட்டதால் இதை அதிசயம் என்று கூறிவிட முடியாது. ஆக, ஒப்பீட்டளவில் 2021 தேர்தலில் விழுந்த வாக்குகளே கிட்டத்தட்ட இம்முறையும் விழுந்திருப்பதாகக் கணக்குச் சொல்கிறார்கள்.

இருப்பினும், உண்மையான வாக்காளர் பட்டியல்படி தமிழ்நாட்டில் 85 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வு. இதற்கு மௌனப் புரட்சி, மாற்றம், ஆதரவு அலை என ஆளுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திருவிழாவுக்குச் செல்வதுபோல சாரை சாரையாகச் சென்று வாக்களித்தவர்களின் மனநிலையை கருத்தாய்வு ஊடகங்கள் கேட்டுத் தெரிந்துகொண்டாலும் அவற்றை வெளியிட ஏப்ரல் 29 வரை தடை உள்ளது.

இருப்பினும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பலரும் பலவிதமான ஜோசியங்களைக் கூறுகிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை என்கிறார் ஊடகப் பிரபலம் மாலன். அதேநேரம், வாக்குப் பதிவு அதிகரித்தால் ஆட்சி மாற்றம் நிகழும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறார் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன். 2001 தேர்தலில் குறைவாக 59.07% வாக்குகள் பதிவானபோதும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது; 2011ல் அதிகபட்ச 78.29% வாக்குகள் விழுந்தபோதும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது என உதாரணங்களை அடுக்குகிறார் அவர். எம்ஜிஆர் அவர்கள் புரட்சி ஏற்படுத்திய 1977 தேர்தலில் பதிவான வாக்குகள் 61.58%. 1971 தேர்தலைக் காட்டிலும் அது 10.5% குறைவு. 1984ல், அதைவிட 12% அதிகமாக 73.5% வாக்குகள் பதிவானபோதும் ஆட்சி மாற்றம் நிகழாமல் எம்ஜிஆரே முதல்வராகத் தொடர்ந்தார்.

சரி, இப்போது என்னதான் நடக்கும்? இன்னும் பத்து நாளில் வரும் விடையால் இந்தக் கேள்வி உடையும். -திருநா

குறிப்புச் சொற்கள்