நாமக்கல்: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் நன்கு யோசித்து வாக்களிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
சனிக்கிழமை (செப்டம்பர் 27) நாமக்கல்லில் பிரசாரம் மேற்கொண்ட அவர், திமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவை ஆதரிப்பதற்குச் சமம் என்றார்.
அவ்விரு கட்சியினரும் வெளியில் அடித்துக்கொள்வதுபோல் நடிப்பார்கள் என்றும் திரைமறைவில் உறவு பாராட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எனவே, மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கல்வி, மின்சாரம், போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என்று அடிப்படை விஷயங்களில் எந்தவித சமரசத்துக்கும் இடம்கொடுக்காமல் செயல்படுவோம் என்று தவெக கூறுகிறது. மற்றவர்களும் இதைத்தானே சொல்கிறார்கள்.
“விஜய் என்ன புதிதாகச் சொல்லிவிட்டார் என்றும் கேட்கிறார்கள். ஆனால், ஒரு மனிதனுக்கு நல்ல உணவு, கல்வி, குடிநீர், மருத்துவ வசதி வேண்டும். மற்ற இடத்திற்குச் சென்றுவர நல்ல போக்குவரத்து, அதற்கான சாலை, பாதுகாப்பான வாழ்க்கை தேவை. இன்றைக்கும்கூட இவை கிடைக்கவில்லை. எல்லோருக்கும் தேவை இருக்கிறது. அப்படியானால் தவெக சொல்வதுதானே சரி?” எனக் கேள்வி எழுப்பினார் விஜய்.
திமுகவைப் போல் தவெக பொய்யான வாக்குறுதிகளை எப்போதும் கொடுக்காது என்றார் அவர்.
செவ்வாய்க் கிரகத்தில் ஐடி நிறுவனம் கட்டப்படும், காற்றில் கல்வீடு கட்டுப்படும், அமெரிக்காவுக்கு ஒற்றையடி பாதை போடப்படும். வீட்டுக்கு உள்ளேயே விமானங்கள் இயக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இஷ்டத்துக்கு அளந்துவிடுவதைப் போல் தவெக செயல்படாது என்றும் அவர் விமர்சித்தார்.
“அதிமுக, பாஜக நேரடி உறவுக்காரர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். அவர்களுடைய கூட்டணி மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதும் மக்களுக்குத் தெரியும். அதேசமயம் திமுக குடும்பம், பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.
தொடர்புடைய செய்திகள்
“மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்திற்கு என்னதான் செய்தது? நீட் தேர்வை ஒழித்துவிட்டனரா, கல்விக்கு தேவையான நிதியை முழுமையாகக் கொடுத்துவிட்டனரா? இல்லை தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்தையும் செய்துவிட்டனரா?
“இப்படிப்பட்ட பாஜகவுடன் கூட்டணியா என அதிமுகவைப் பார்த்து எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள்,” என்று அதிமுக தலைமையையும் விஜய் கடுமையாக விமர்சித்தார்.