புதுடெல்லி: துபாயிலும் அபுதாபியிலும் இருந்து இந்தியாவுக்கான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கின.
திங்கட்கிழமை (மார்ச் 2) இரவு முதல் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதாக வெளியான தகவல்கள் அங்கு சிக்கியுள்ள ஏராளமான இந்தியக் குடிமக்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்துள்ளது.
கடந்த சில நாள்களாக இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச்சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தொழில், சுற்றுலா, வேலை வாய்ப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக அங்கு சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர்.
இந்தியக் குடிமக்களை எப்படியாவது மீட்க வேண்டும் என இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தாரும் நண்பர்களும் இந்திய அரசுக்குக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், துபாய் விமான நிலையங்கள் திங்கட்கிழமை மாலை முதல் குறைந்தபட்ச ஏற்பாடுகளின் அடிப்படையில், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக துபாய் ஊடக அலுவலகத்தின் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிகளைத் திருப்பி அனுப்ப சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து பத்துச் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
தேவையான ஒப்புதல்கள், வான்வெளி நிலைமைகளுக்கு உட்பட்டு, பயணிகளைத் திரும்ப அழைத்துவர இன்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளதாக இந்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, துபாயிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட முதல் விமானம் திங்கட்கிழமை டெல்லி சென்றடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதில் வந்த 300 பயணிகளை அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் கண்ணீர் மல்க உற்சாகமாக வரவேற்றனர்.
உதவி கோரிய 498 தமிழர்கள்
இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் நிலவும் பகுதிகளில் இருந்து உதவி கோரி 498 பேர் தொடர்பு கொண்டதாக தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை தெரிவித்துள்ளது.
இதற்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு தொலைபேசி எண்கள் மூலம் ஜனவரி 28ஆம் தேதி முதல் இப்போது வரை 974 இந்தியர்கள் உதவி கோரி அழைத்ததாகக் கூறப்பட்டது.
இவ்வாறு அழைத்தவர்களில் 498 பேர் தமிழர்கள் என தமிழக அரசு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் இருந்து 253 பேர், பஹ்ரைன் 95, கத்தார் 66, சவூதி அரேபியா 13, ஒமான் நாட்டைச் சேர்ந்த 6 பேர் எனப் பல்வேறு நாட்டு குடிமக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உதவி கோரியுள்ளனர்.
இவ்வாறு அழைத்த அனைவருமே தொழில் நிமித்தமாகவும் மத்திய கிழக்க நாடுகளுக்குச் சென்று சிக்கிக்கொண்டவர்கள் என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவருக்கும் தங்கும் இடம், உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்திருப்பதாக வெளிநாட்டுவாழ் நலத்துறை கூறியது.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர்களது குடும்பத்தார் அச்சமோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

