சென்னை: வாக்குப்பதிவு நடக்கும்போது வாக்குச்சாவடிக்குள் புகைப்படம், காணொளி எடுத்தால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இம்முறை தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஏறக்குறைய 14.59 லட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களித்த பிறகு விரலில் வைக்கப்படும் மையுடன் காட்சியளிக்கும் செல்ஃபி படங்கள், காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்வது இளையர்கள் மத்தியில் வழக்கமாகி வருகிறது.
எனினும், இந்திய ஜனநாயகத் தேர்தல் செயல்முறையின்படி, வாக்குப்பதிவின் ரகசியத் தன்மையைக் காக்க வேண்டும் என்பது அவசியம்.
இளையர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக வாக்குச்சாவடி மையத்துக்குள் மின்னணு வாக்குப்பதிவில் இயந்திரத்தின் பொத்தானை அழுத்தும்போது அதை புகைப்படமாகவோ காணொளியாகவோ பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
இதையடுத்து, இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
ஒரு வாக்காளர் எந்த வேட்பாளருக்கு, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை வெளியே தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் ஒருசேர வழங்கப்பட வாய்ப்புள்ளது.

