சென்னை: சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், சென்னையில் நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அந்த அறிக்கையின்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குத் தீர்வாக பல்வேறு புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாநகரம் முழுவதும் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு, பொது போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட போதிலும், நெரிசல் குறைந்தபாடில்லை.
காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டு அலுவலகம் உள்ளிட்ட பணிகளுக்காக வெளியே கிளம்பிச் செல்வோர், வீடுதிரும்ப இரவு பத்து மணி ஆகிவிடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கேரளாவை அடுத்து தமிழகத்திலும் நீர்வழி போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை எவ்வாறு சாத்தியப்படுத்துவது என்பதை அலசும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆகிய மூன்று துறைகள் இணைந்து, இத்திட்டம் குறித்து இன்று (ஆகஸ்ட் 6) சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளன. அதன் பின்னர் விரிவான அறிவிப்புகள் வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக, கேரளாவில் வாட்டர் மெட்ரோ திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. அதையடுத்து, சென்னையில் அடையாறு ஆற்றில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரையிலான வழித்தடத்தில் இச்சேவை தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது.
“மாற்றுப் போக்குவரத்து என்பதுடன் பலருக்கு வேலை வாய்ப்பும் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும். எனினும், கேரளாவில் நிறைய ஆறுகள் உள்ளன என்பதால் அங்கு ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தைச் செயல்படுத்துவது எளிது.
“தமிழகத்தில், குறிப்பாக சென்னை நிலைமை நேர்மாறாக உள்ளது. அடையாறு ஆற்றில் ஆழமின்மை, கரையோர ஆக்கிரமிப்புகள், மாசடைந்த சூழல் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியிருக்கும். எனவே, இது சவாலான திட்டமாக இருக்கும்,” என்று துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

