சென்னை: தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டுப்படியாகும் விலையில் குடிநீர், பானங்கள், உணவு வகைகளை விற்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மலிவு (குறைந்த) விலை உணவகங்களை திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்து தமிழ் திசை போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் உணவகங்கள் நடத்த அதிக தொகை செலுத்தி குத்தகை எடுக்க வேண்டியிருப்பதால், அவற்றில் விற்கப்படும் குடிநீர், உணவுகளின் விலையும் மிக அதிகமாக உள்ளது.
விமானத்தில் பறக்க வேண்டும் என்ற சாமானியர்களின் ஆசை நிறைவேறினாலும், விமான நிலைய உணவுகளின் விலை என்பது மலைப்பையே ஏற்படுத்துகிறது.
தற்போது பெரும்பாலான இந்திய விமான நிலையங்களில் தண்ணீர் போத்தல் 125 ரூபாய், தேநீர் - காப்பி ரூ.125, இட்லி ரூ.250, பிரியாணி ரூ.450 ரூபாய் என விற்கப்படுகின்றன.
இந்நிலையில், கோல்கத்தா விமான நிலையத்தில் ‘உடான் யாத்ரி கபே’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை சோதனை செய்யும் முயற்சியில் இறங்கியது இந்திய அரசு.
கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த உணவகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இதேபோன்ற உணவகங்களைத் தொடங்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு தண்ணீருக்கு மட்டுமே ரூ.500ம், இட்லி, தோசை போன்ற உணவுகளை மனநிறைவுடன் சாப்பிட குறைந்தது ரூ.500 முதல் ரூ.1,000 வரை செலவாகிறது,” என்பதே பெரும்பாலான பயணிகளின் புலம்பலாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மலிவு விலை உணவகங்களில் ரூ.10க்கு தண்ணீர் போத்தல், 10 ரூபாய்க்கு தேநீர், காப்பி போன்ற பானங்கள், 20 ரூபாய்க்கு சமோசா போன்றவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மிக விரைவில் இந்த மலிவு விலை உணவகம் சென்னை விமான நிலையத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் பின்னர் திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களிலும் இயங்கும் என்றும் ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.