சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அக்கட்சி எம்எல்ஏ செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் நிலவுவதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில், அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அண்மைய சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும்கூட, மற்ற அதிமுக எம்எல்ஏக்களுடன் வராமல், பேரவைக்குத் தனியாக வந்தார் செங்கோட்டையன். மேலும், அண்மையில் பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசினார். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பழனிசாமியும் செங்கோட்டையனும் சந்தித்துப் பேசியதாகவும் அப்போது இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவினரைப் பிரிக்க முயற்சி செய்தால், அத்தகைய செயலில் ஈடுபடுவோர்தான் மூக்குடைந்து போவார்கள்.
“அதிமுகவினரை பிரித்துப் பார்க்கவே முயற்சிக்கின்றனர். எப்போது பார்த்தாலும் அதிமுகவில் மட்டும்தான் குழப்பம் வரவேண்டுமா என்ன? நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்,” என்றார் பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் இந்த விளக்கம் அதிமுகவினர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், செங்கோட்டையன் தரப்பினரும் கட்சித் தலைமையின் இந்தச் சமரச போக்கால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செங்கோட்டையனும் ஒரே மேடையில் காணப்படுவார்கள் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

