திமுகவுடன் பேசக் காத்திருக்கிறோம்: காங்கிரஸ்

திமுகவுடன் பேசக் காத்திருக்கிறோம்: காங்கிரஸ்

1 mins read
ae555dfc-5892-45ec-b1bc-32351b298006
 கிரிஷ் சோடங்கர். - படம்: பிடிஐ

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச திமுக தலைமை விரைவில் அழைக்கும் எனக் காத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தள்ளார்.

இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. எனினும் இருதரப்பும் இதை மறுத்தது.

தமிழக காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்களில் சிலர் ஆட்சி அதிகாரத்தில் தங்கள் கட்சிக்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டுமென குரல்கொடுத்தனர். இதையடுத்து, திமுக எம்பி கனிமொழி டெல்லி சென்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது, ஆட்சியில் பங்களிக்க அறவே வாய்ப்பில்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து இத்தேர்தலில் காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 39 தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நன்கு வளர்ச்சி கண்டு வலுவாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதனால்தான் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகளும்கூட காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட திரு கிரிஷ், இரு தரப்பினரும் நடத்தும் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் எனக் கருதுவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்