நீர் வளத்தை அழிக்கும் சாயப்பட்டறைகள் வேண்டாம்: அன்புமணி ராமதாஸ்

2 mins read
e60e3aad-b59a-46a3-9950-966ed80151e8
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ். - கோப்புப்படம்: ஊடகம்

சேலம்: விவசாயத்தையும், நீர் வளத்தையும் மேம்படுத்துவதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு, அவற்றை அழிக்கும் வகையில் புதிய சாயப் பட்டறைகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஜவுளிப் பூங்காவில் நீர், நிலம் மற்றும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வகையிலான சாயப்பட்டறைகள் அமைக்க அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜாகிர் பாளையத்திலுள்ள சிப்காட் வளாகத்தில், 119 ஏக்கர் பரப்பளவில் ரூ.800 கோடி முதலீட்டில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொடக்கக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜவுளிப் பூங்காவின் ஓர் அங்கமாக பல சாயப்பட்டறைகள் அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்காக சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்குச் சாயப்பட்டறை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், மக்கள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது சாயப்பட்டறைகளை அமைப்பது பேரழிவை ஏற்படுத்தும் திட்டமாகும்.

சாயப்பட்டறைகளின் தேவைக்காக நிலத்தடி நீர் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு உறிஞ்சி எடுக்கப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். அடுத்ததாக சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சரிசெய்ய முடியாத வகையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

தமிழ்நாட்டில் சாயப்பட்டறைகள் செயல்படும் எந்தப் பகுதியிலும் அவற்றின் கழிவு நீர் முறையாகச் சுத்திகரிக்கப்படுவதில்லை. கடலோரப்பகுதிகளிலும், ஆற்றங்கரைகளிலும் அமைந்திருக்கும் சாயப்பட்டறைகளின் கழிவு நீர் அரைகுறையாக சுத்திகரிக்கப்பட்டு ஆறுகளிலும், கடல்களிலும் கலக்கவிடப்படுகின்றன.

ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டால் நீர் வளங்களும் வேளாண்மையும் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று திரு அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்