சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் காவல் அதிகாரிகள் நடிகை நமீதாவிடம் சாதிச் சான்றிதழ் கேட்டு கெடுபிடி காட்டியதாகக் கூறி, நடிகை நமீதா ஒரு காணொளி வெளியிட்டிருந்தார்.
“நான் இந்துவா என்பதற்கான சான்றிதழையும் கேட்டனர். என் சொந்த நாட்டிலேயே நான் அந்நியமாக்கப்பட்ட நிலையை உணர்ந்தேன். இதுவரை என்னிடம் யாரும் சாதிச் சான்றிதழ் கேட்டதில்லை. நான் இந்துவாக பிறந்தவள். என் குழந்தைகளுக்கும் இந்து பெயரைத்தான் வைத்துள்ளேன்.
அந்த அதிகாரிக்கு எப்படி பேச வேண்டும் என தெரியவில்லை. இது குறித்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நமீதா கோரிக்கை விடுத்துள்ளார். அந்தக் காணொளி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.
முக்கிய பிரபலங்கள் மற்றும் வெளிநாட்டினர் வரும்போது விசாரிப்பது வழக்கமான நடைமுறையே எனக் கோயில் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “நடிகை நமீதா இஸ்லாமியராக இருப்பாரோ என்று நினைத்து அவருக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கெடுபிடி காட்டப்பட்டிருக்கலாம், இதற்காக சகோதரி நமீதா வருத்தப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்ததாவது: நடிகை நமீதாவை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்க கெடுபிடிகள் இருந்ததாக அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
பிரபலங்கள் கோயிலுக்கு வரும்போது, சந்தேகம் ஏற்பட்டால் கோயில் அதிகாரிகள், அவர்கள் சார்ந்த மதம் குறித்து கேட்பது உண்டு. அந்த வகையில், பணியில் இருந்த பொறுப்பு அதிகாரி, நடிகை நமீதாவிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் கணவர் இந்து, இந்து முறைப்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம் என நமீதா தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் விஐபி தரிசனம் முடித்துச் சென்றனர்.

