சென்னை: தமிழ்நாட்டில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியும் உள்ளார்.
“திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். ஐந்து தொகுதிகள் குறித்து மீண்டும் பேசி முடிவெடுப்போம்,” என்று திரு செல்வப்பெருந்தகை கூறினார்.
“தென்காசி, விருத்தாச்சலம் தவிர 16 தொகுதிகளை மீண்டும் காங்கிரஸ் திரும்பப் பெற்றுள்ளது.
“ஈரோடு கிழக்கு ஏற்கெனவே காங்கிரஸ் நின்ற தொகுதி, அதனால் அதைத் திரும்பப் பெற்றுள்ளோம். கன்னியாகுமரியில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அதில் ஒன்றை திமுக கேட்கிறது,” என்று அவர் விவரித்தார்.
“தொகுதிகள் குறித்து கட்சித் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. திமுக கேட்கும் தொகுதியைக் கொடுப்பது சற்று கடினம். ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் சில பிரச்சினைகள் உள்ளன.
“அது குறித்து முதல்வரிடம் பேசி பிரச்சினையைத் தீர்ப்போம். வேட்பாளர் அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும்,” என்று திரு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

