சென்னை: இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தனது 72வது பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை காலஞ்சென்ற தமிழக முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி, தந்தை பெரியார் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், “அண்ணா வழியில் அயராது உழைப்போம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்,” என்று சூளுரைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்,” என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையெழுத்திட்டு தமிழிலேயே முதல்வருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
“தாங்கள் இன்று தங்களுடைய 72வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
“எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்த நாளில் தங்களை வாழ்த்துகிறேன்,” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியிலும் தவெக தலைவர் விஜய் டுவிட்டர் மூலமாகவும் முதல்வர் ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, தனது பிறந்தநாளையொட்டி அவர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்து ஆசி பெற்றார்.