நீலகிரி: தேசிய கல்விக் கொள்கை மக்கள் நலனுக்கானது என்று துணை அதிபர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.
ஊட்டியில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய அவர், இதன் மூலம் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல், உயர்கல்வியைக் கற்கலாம் என்றார்.
பயங்கரவாதம் என்பது ஒற்றுமையாகக் கையாளப்பட வேண்டிய, உலகளாவிய அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட துணை அதிபர், இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றார்.
நாட்டைக் கட்டமைத்து, சமூகத்தை மாற்றும் வலிமை கல்விக்கு உண்டு என்றும் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இளையர்களுக்குத் தரமான கல்வி அளிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் இருந்ததாகக் கூறினார்.
“இந்தியாவில் 11 செம்மொழிகள் உள்ளன. இவை நமது கலாசாரம், பண்பாடு, கல்வியைப் பறைசாற்றுகின்றன. கல்வியில் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் இது. இந்த நடைமுறையால் உலக அளவில் நமது நாடு வல்லரசாக மாறி வருகிறது.
“நாம் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். மேற்கத்திய, காலனியாதிக்க மனப்பான்மையை விட்டு, நமது பாரம்பரியக் கல்வி முறையை இளைய சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும். தாய்மொழியில் மருத்துவம், பொறியியல், உயர் கல்வியைக் கற்பதை உறுதிசெய்ய வேண்டும்,” என்று துணை அதிபர் ஜெகதீப் தன்கர் மேலும் தெரிவித்தார்.