மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

2 mins read
be0dbace-a15e-4e19-abd1-e47ec6c95212
உயர் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இதையடுத்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சார்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மத்திய அரசு எந்தக் காலத்திலும் திமுக அரசை மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பொருளியலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு ‘மெட்ரிகுலேஷன்’ பள்ளிகளில் 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த மாணவர்களின் கல்விச் செலவுக்காக, மாநில அரசு சார்பாக குறைவான தொகைதான் வழங்கப்படுகிறது என மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பாக வழக்குத் தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2024-2025ஆம் ஆண்டு கல்விக் கட்டணமாக நிர்ணயித்த தொகையை 12 வாரங்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் 2025-2026ஆம் கல்வி ஆண்டு செலவுத் தொகையை மறு நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இதையடுத்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சார்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் படிக்கும் பொருளியலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு 60% நிதியை மத்திய அரசு தர வேண்டும், மீதமுள்ள 40% தொகையை மட்டுமே மாநில அரசு தரும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார்.

“ஆனால், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே, நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. எனவேதான், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிதியை விடுவிக்கவில்லை,” என்றார் அரசு வழக்கறிஞர் ரவீந்திரன்.

மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்பார்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பியபோது, “மத்திய அரசின் இத்தகைய மிரட்டலுக்கு, மாநில அரசு அடிபணியாது. இவ்விவகாரத்தில் உரிய பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்,” என்று பதிலளித்தார் தமிழக அரசு வழக்கறிஞர் ரவீந்திரன்.

இதையடுத்து, வழக்கு விசாரணை அக்டோபர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்