சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்கும் பட்சத்தில், பதவியேற்ற பின்னர் ஆறு மாதங்களுக்கு விஜய்க்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்முறையாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், தவெக ஆட்சியின் செயல்பாடுகளை ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக திமுக கவனித்து வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சட்ட சிக்கல் ஏற்படுவதையும் விரைவில் இன்னொரு தேர்தல் நடத்தப்படுவதையும் திமுக விரும்பவில்லை என்றும் திரு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தவெக தனது தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களையும் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
புதிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு உதவித்தொகை ரூ.1,000 ஆகியவை தொடர வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
“பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக விஜய் கூறியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம். நாங்கள் செய்தது போல குறைந்தபட்சம் பெண்களுக்கு ரூ.1,000 கொடுக்க வேண்டும். 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கட்சி அளித்த வாக்குறுதிகளில் 90 விழுக்காடு திமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது,” என்றார் ஸ்டாலின்.
மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக நீட் தேர்வை நிறுத்துவது போன்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அவர், இந்தத் தேர்தலிலும், முழுமையாக நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மட்டுமே திமுக தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தது என்று கூறியுள்ளார்.
குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு உருளை போன்ற வாக்குறுதிகளைத் தவெக நிறைவேற்றும் என்று தாம் நினைக்கவில்லை என்றும் ஒருவேளை அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் மகிழ்ச்சியடைவோம் என்றும் அப்பேட்டியில் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

