சென்னை: கோமியத்தில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளது என்று இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர் காமகோடி அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருவது தொடர்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மீண்டும் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயக்குநராக இருக்கும் காமகோடி, அறிவியல் ரீதியாக சிந்திப்பதை விடுத்து மூட நம்பிக்கையின் அடிப்படையில் பிற்போக்குத்தனமாகப் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுவதை வழிமொழிந்து காமகோடி பேசியிருக்கிறார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
“காமகோடி ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைக்குரிய செயல்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதால் இவரைப் போன்றவர்கள் இப்பொறுப்பில் நீடிப்பது அங்கே படிக்கின்ற மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல.
“எனவே, இத்தகைய கருத்துகளின் மூலம் கல்வி நிலையங்களைக் காவி மயமாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.