கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தின் புர்பா மிதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹல்தியா நகரில் வேதி ஆலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) அதிகாலை 4 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குறைந்தது 20 பேர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு பணிபுரிந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹல்தியா நகரில் செயல்பட்டுவரும் ‘ஹல்தியா பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிட்டெட்’ நிறுவனத்தின் அந்த எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையில், கச்சா எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ‘நாப்தா’ எரிபொருள் நேரடியாக வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படாது. அதேவேளையில், பிளாஸ்டிக், பெயின்ட், மருந்துகள் போன்ற வேதிப்பொருள்களைத் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆலையில் பற்றிய தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. பற்றி எரிந்த தீ அருகேயுள்ள சிரஞ்சீவிப்பூர் என்னும் குடியிருப்புப் பகுதிக்கும் பரவியது. அப்பகுதி மக்கள் உயிருக்கு அஞ்சி வீட்டைவிட்டு வெளியேறினர்.
சுற்றுவட்டாரத்தில் இருந்த பல வீடுகளுக்குத் தீ பரவியது. ரயில் தண்டவாளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளும் தீயால் பாதிக்கப்பட்டதால், ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்தத் தீ விபத்து குறித்து ‘ஹல்தியா பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிட்டெட்’ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தீ விபத்து குறித்த விசாரணையில் தேவையான ஆதரவை வழங்கி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆலைக்கு அருகேயுள்ள சட்டவிரோதமாக ‘நாஃப்தா’ குழாயில் துளையிடப்பட்டிருந்த இடத்தின் அருகே இந்தத் தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘நாஃப்தா’ என்பது மிக எளிதில் தீப்பற்றக்கூடிய, தீவிரமாக எரியக்கூடிய ஒரு ஹைட்ரோகார்பன் ஆகும். இதில் உள்ள கடுமையான பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, பெட்ரோலியப் பொருள்களை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவதற்கோ அல்லது கையாள்வதற்கோ எதிராக நிறுவனம் உள்ளூர் சமூகத்தினரைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறது,” என்று அந்த அறிக்கை கூறியது.
இந்தச் சம்பவத்திற்கான சரியான காரணத்தை அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஹல்தியா பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

