கைதட்டினால் கேட்கக்கூடிய தூரத்தில்தான் தமிழ்நாடும் கேரளாவும் உள்ளன. ஆனால், அரசியல், ஆட்சி, அதிகாரம் என்று வரும்போது இரண்டு மாநிலங்களும் வெவ்வேறு பாணியைக் கடைப்பிடிக்கின்றன. ஜனநாயகம், பணநாயகம் என்பதில் இரு மாநிலங்களும் வேறுபடுகின்றன.
ஏப்ரல் 9ஆம் தேதி கேரளாவில் வாக்களிப்பு.
அடுத்தடுத்து இரு தேர்தல்களில் வென்று கேரள முதல்வர் பதவியில் பத்தாண்டுகளாக பினராயி விஜயன் நீடிப்பது கேரள அரசியலில் அதிசயம். ஈ.கே. நாயனாருக்குப் பிறகு அதிக காலம் கேரள முதல்வராக நீடிக்கும் இரண்டாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அவர்.
பத்தாண்டுகால ஆட்சியை மீண்டும் அவர் தொடர முடியுமா என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. காரணம், அவரது ஆட்சியின் நேர்மைக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் சபரிமலை தங்கம் களவுபோனது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அது கேரள வாக்காளர்களிடையே எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதைவிட ஆளும்தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் நீடிக்கும் முரண்பாடு, ஆளும் கட்சிக்குப் பாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.
தேசிய அரசியலில் ‘இண்டியா’ கூட்டணியில் ஓரணியில் நிற்கும் கம்யூனிஸ்ட்டும் காங்கிரசும் கேரளாவில் எதிரெதிர் திசையில் நின்று தேர்தலில் களம் காண்கின்றன.
2023ஆம் ஆண்டு அந்தக் கூட்டணி ஏற்பட்ட பின்னர், நடைபெற இருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது.
இரு தரப்புகளிடையிலான முரண்பாடு, மூன்றாவது கட்சியைத் தேர்ந்து எடுக்கும் நிலைக்கு கேரள வாக்காளர்களைத் தள்ளியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதனால்தான், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகக் களமிறங்கிய நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்; மத்திய இணை அமைச்சரானார்.
தொடர்ந்து, 2025 டிசம்பரில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெருவாரியான வாக்குகள் கிடைத்தன. அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 14.71 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதித்தது.
குறிப்பாக, நாற்பதாண்டுகளுக்குமேல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி, பாஜகவசம் சென்றது எதிர்பாரா திருப்புமுனையாக அமைந்தது.
இந்தத் தேர்தலில் 27 மில்லியன் வாக்காளர்கள் கேரள அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்க உள்ளனர். 140 சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கேரள மக்கள் ஒரேயடியாக பாஜக பக்கம் திரும்பிவிடுவார்கள் என்று சொல்வதற்கில்லை.
காரணம், அங்குள்ள மக்கள்தொகையில் 47 விழுக்காட்டினர், அதாவது கிட்டத்தட்ட சரிபாதி மக்கள் முஸ்லிம், கிறிஸ்துவ சிறுபான்மையினர்.
பத்தாண்டுகளுக்கு முன்னர், 2016 ஒரே ஒரு தொகுதியில் வென்று சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்த பாஜக 2021 தேர்தலில் அந்த ஓரிடத்தையும் நழுவவிட்டது.
ஆனால், இம்முறை அக்கட்சி அதிக இடங்களில் வெல்லக்கூடிய நிலை உருவாகி உள்ளது. பாரத் தர்ம ஜனசேனா, டுவென்டி20 போன்ற மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது பாஜக. 42 கூட்டணி வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ள வேளையில், 98 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
‘வெளியில் கைகொடுப்போம்; உள்ளுக்குள் கைகலப்போம்’ என்பது மாதிரியான முரண்பாட்டைக் கொண்டுள்ள இரண்டு கூட்டணிகளுக்கான ஒரு மாற்றாகவே பாஜக கூட்டணியை கேரள மக்கள் பார்க்கிறார்கள்.
அதனால், அந்தக் கூட்டணிக்கு இத்தேர்தலில் மக்களின் ஆதரவு பெருகக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஊரு ரெண்டுபட்டால் பாஜகவுக்குக் கொண்டாட்டம் என்கிற மாதிரியான சூழல் அந்த மாநிலத்தில் நிலவுகிறது.

