வீட்டுக்குள்ளும்‘விசில்’ சத்தம்

வீட்டுக்குள்ளும்‘விசில்’ சத்தம்

3 mins read
8648c727-27b7-49ed-a2ad-81c97c29d66d
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் போட்டியிடுகிறது. - படம்: செயற்கை நுண்ணறிவு

-எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது அவரை ஆதரித்த இளையர்களைக் ‘கூத்தாடிக் கும்பல்’ என்றார்கள்.

-விஜயகாந்த் தேர்தல் களம் கண்டபோது நடிகர் வடிவேலுவை இறக்கிவிட்டு வசைபாட வைத்தனர்.

-விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் அவரை ஆதரிப்போரை ‘தற்குறிகள்’ என்று விமர்சிக்கிறார்கள்.

இப்படியெல்லாம் இழிவுசெய்தாலும் அந்த நடிகர்களின் அரசியல் முகம் பளிச்சிட்டதே ஒழிய, பட்டுப்போகவில்லை.

முதல் தேர்தலிலேயே திண்டுக்கல்லில் திமுகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியது எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு.

விஜயகாந்த்தின் முதல் தேர்தலில் கிடைத்த 8.45 விழுக்காட்டு வாக்குகள், கிட்டத்தட்ட 100 தொகுதிகளின் வாக்குகளை உடைத்ததால் ஜெயலலிதா ஆட்சியைப் பறிகொடுத்தார்; கருணாநிதி, வரலாற்றில் முதல்முறையாக சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தார்.

இது விஜய் காலம்.

விஜய் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளரப் பார்த்தார். ஆனால், அவர் வளரக்கூடாது என வேலைபார்த்ததால் குறுகிய காலத்திலேயே திமிங்கலக் கட்சிகளுக்கு சவாலாக வளர்ந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். பிரசாரக் கூட்டத்தில் அவருக்குச் சேரும் கூட்டம், மாறி மாறி ஆட்சிசெய்த கழகங்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறது என்றும் விஜய்க்கு ஆதரவான ஒரு மௌன அலை வீசுவதை அவர்கள் அறிந்துள்ளனர் என்றும் களத்தில் பேசப்படுகிறது.

“41 பேர் மரணம் தொடர்பான விசாரணை, மனைவி சங்கீதா தொடர்பான குடும்ப விவகாரம், ‘ஜனநாயகன்’ சிறைபிடிப்பு - இவை எல்லாம் விஜய்யின் கூட்டத்தைக் குறைத்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு பிரசாரத்திலும் ‘எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்’ என்று விஜய் உணர்ச்சிபொங்கக் கூறும்போது ஆறுதல் கலந்த ஆதரவுக்குரல்கள் எழுகின்றன,” என்பது ஊடகவியலாளர்களின் கருத்து.

விஜய் அதிகமாக குறிவைத்திருப்பது 14-29 வயது ஜென் ஸீ இளையர்களைத்தான். அவருடைய பிரசார பாணியும் அவ்வாறே அமைந்து வருகிறது. அரசியல் பெருந்தலைகளை நோக்கி ஏதாவது வீசப்பட்டால் காவல்துறை பேசும். ஆனால், விஜய் தம்மீது வீசப்படும் கட்சித் துண்டைப் பிடித்து சால்வையாகப் போர்த்திக்கொள்கிறார்; தொண்டருக்கு இணையாக தலையில் கட்டிக்கொள்கிறார். இளையர்களின் ஆதரவு ஆயிரத்திலிருந்து லட்சமாகவும் படிப்படியாகக் கோடியாகவும் மாறி வருவதற்கு இதுபோன்ற அணுகுமுறைகளே காரணம் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

ஆட்சியைப் பிடிப்பாரா, முதல்வராக வந்து என்ன செய்யப்போகிறார் என்னும் கேள்விகள் எல்லாம் விஜய் ஆதரவுத் தம்பிகளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. தடுப்புகளைத் தாண்டியும் அனலாகக் கொதிக்கும் வெயிலில் காய்ந்தும் காத்துக்கிடக்கும் இளையர்களும் பெண்களும் விஜய்யின் முகத்தைத் தூரத்தில் கண்டதும் தங்களை அறியாமலேயே துள்ளிக்குதிக்கிறார்கள். இப்போதெல்லாம் நடுவயதினரையும் அவரது பிரசாரக் கூட்டத்தில் காணமுடிகிறது. கோவையில் விஜய்யைக் காண வந்த மூதாட்டி ஒருவர் சரிந்து விழுந்தார் என்ற செய்தி, ‘பாட்டிகளுமா?’ என்றே கேட்கத் தோன்றுகிறது.

233 தொகுதிகளில் போட்டியிட்டாலும் தனி ஒருவனாக எல்லாத் தொகுதிக்கும் சென்று பிரசாரம் செய்ய இயலாமல் போக வாய்ப்பு உள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில், வாக்களிக்கும் வயதை எட்டாத சிறுவர் சிறுமியரில் பலர் தங்களது பெற்றோரையும் தாத்தா, பாட்டியையும் விசில் சின்னத்துக்கு வாக்களிக்கச் சொல்லி வீட்டுக்குள்ளேயே பிரசாரம் செய்கிறார்கள். இதனைச் சொன்னவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.

அரசியல் கட்சிக்கான கட்டமைப்பு இல்லாதது, முகம் தெரியாத வேட்பாளர்கள், களத்திற்கு தொடர்ந்து வராத தலைவர், நட்சத்திரப் பேச்சாளர்கள் இல்லாதது, கோடிகளை அள்ளி இறைக்கும் பண வசதி இல்லாத கட்சியினர் - என்று பலவிதமான பாதக அம்சங்கள் இருந்தபோதிலும் நடிகர் விஜய் என்னும் ஒருவருக்காகவே அத்தனையும் சாதகமாக மாறிக் காட்சியளிப்பதாக களஆய்வு நடத்தியவர்கள் சொல்கிறார்கள்.

ஆக, விஜய்யின் அரசியல் தாக்கம் தேர்தல் களத்தில் பலமாகவே எதிரொலிக்கிறது. கூடவே, தூய ஆட்சிக்கான வேட்பாளர் பட்டியலில், பாலியல் சீண்டல் வழக்கில் முன்பிணை பெற்றவரும் உள்ளாரே என்ற குரலும் எதிரொலிக்கிறது. -திருநா

குறிப்புச் சொற்கள்