தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும்: அதிமுக

2 mins read
aa516d05-3ab7-48a5-8841-8a841e4ca711
அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமி. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ் நாட்டில் இதுவரை ஈர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் 2025 ஆம் ஆண்டுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் உலக அளவிலான வணிக நிறுவனங்களின் தலைவர்களும், அரசு துறையைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இதில், உலக அளவில் பொருளாதார நிலை, வணிக மாற்றங்கள், மாறி வரும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் பெருமளவு முதலீட்டை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

ஆனால், தமிழ் நாட்டிற்காக எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவில்லை.

பிற மாநிலங்கள் எல்லாம் தீவிர முயற்சி மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழகம் சார்பில் எந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

இதிலிருந்து முதல்வர் ஸ்டாலின் கூறுவதுபோல், “தமிழகத்துக்குப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து வருவதாக கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை,” என்பதையே இது காட்டுகிறது. உண்மையான முதலீட்டாளர்கள் தமிழகத்தை நாடி வருவதாகத் தெரியவில்லை என்று எடப்பாடி கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடு எவ்வளவு என்று வெள்ளை அறிக்கை கேட்ட ஸ்டாலின், கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் திமுக ஆட்சியில், உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியும், 4 முறை வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

உண்மையில், திமுக அரசால் தமிழ் நாட்டுக்கு இதுவரை எவ்வளவு முதலீடுகள் கிடைத்துள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்