தமிழக நிதிநிலை குறித்து இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை: மரிய வில்சன்

தமிழக நிதிநிலை குறித்து இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை: மரிய வில்சன்

1 mins read
6ae46d4b-b6fa-449d-9c5e-b9f30db5ff7f
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன். - படம்: இந்து தமிழ் திசை

புதுச்சேரி: தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் இரண்டு வாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (மே 29), புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடந்த கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியக் கூடைப்பந்துச் சம்மேளனத் தலைவரும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான திரு ஆதவ் அர்ஜூனா, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் திரு மரிய வில்சன் செய்தியாளர்களிடம் பேசினார்.

“முதலமைச்சர் விஜய் கூறியதைப் போலத் தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். மேலும் திருத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டம் கூடிய விரைவில் தாக்கல் செய்யப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் டெல்லிப் பயணம் வெற்றியா, தோல்வியா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

“திரு விஜய்யின் சந்திப்பு மரபுமுறை சார்ந்தது. முதல் முறையாக அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகியுள்ளார். அதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துள்ளார்,” என்று திரு மரிய வில்சன் குறிப்பிட்டார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா? என்ற கேள்விக்கு, அதைத் தலைமைதான் முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்